மின் கட்டண உயர்வு குறித்து முதல்வருக்கு தொழில் துறையினர் கேள்வி
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தொழில் துறை அமைப்பினர்.
மின் கட்டண உயர்வு தொடர்பாக கோவையில் பத்திரிகையாளர்களை தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சந்தித்து பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
மின் கட்டண உயர்வால் தொழில்துறை பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. 13 லட்சம் சிறு குறு தொழில் முனைவோரை கொண்ட தமிழ்நாடு தொழில் துறை, நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 கோடி நபர்களுக்கான வேலைவாய்ப்பை தந்து வருகின்றது. தொழில் வளர்ச்சியில் சிறு குறு தொழிலின் பங்கு பெருமளவில் இருக்கின்றன. இந்த நிலையிலே, தமிழ்நாடு அரசாங்கம் உயர்த்திய தொழில் துறை பயன்பாட்டுக்கான பிக் ஹவர்ஸ் மின் கட்டணம், நிலை கட்டணம், சோலர் உற்பத்தி கட்டணம் உள்ளிட்ட மின்சார கட்டணம் கடும் நெருக்கடிக்கு தள்ளி இருக்கின்றது.
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சார்பில், தமிழ்நாடு முழுவதும் எட்டு கட்டங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இதுவரை முதல்வரை சந்திக்க முடியவில்லை. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கவும், வெளிநாடு சென்று முதலீட்டாளர்களை ஈர்க்கவும் முதல்வர் முனைப்பு காட்டும் நிலையில், சிறுகுறு தொழில் முனைவோரை சந்திக்காமல் இருக்கின்றார். உடனடியாக சிறுகுறு தொழில் முனைவோரை சந்தித்து, தமிழ்நாடு சிறு குறு தொழில் முனைவோர் தெரிவிக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து, வருகின்ற தமிழ்நாடு அரசாங்கத்தின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
ஒருவேளை பட்ஜெட்டில் எங்களின் எதிர்பார்ப்புகள் இல்லை என்றால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்குவோம். எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், அரசு தரப்புக்கு தொழில்துறை சார்பாக ஆதரவு தரப்படும். ஒரு ட்ரில்லியன் டாலர் எக்கனாமி என்ற நிலையில் தமிழ்நாடு தொழில் துறை உலக அளவில் உயர முனைப்பு காட்டுகின்ற முதலமைச்சர், இதில் 25 சதவீத பங்களிப்பினை தரும் வல்லமை படைத்த தமிழ்நாடு சிறு குறு தொழில் துறையை தூக்கிவிடும் விதமாக, சிறு குறு தொழில் முனைவோர் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu