திமுக ஆட்சியில் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு: எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு
எஸ்.பி. வேலுமணி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய எஸ்.பி. வேலுமணி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காரணமாக 62 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். ஆட்சியாளர்கள், காவல் துறை ஆகியோரின் மெத்தன போக்கால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடந்து இருக்கின்றது. இதை கண்டித்து சட்டமன்றத்தில் அதிமுக போராட்டம் நடத்தியது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் இந்த போராட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் அப்பாவி மக்களுக்கான ஆர்ப்பாட்டம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கஞ்சா விற்பனை, கள்ள சாராய விற்பனை அதிகரித்து இருக்கிறது. கள்ளச்சாராய விற்பனை நடந்த இடத்தின் அருகில் காவல் நிலையம், நீதிமன்றம், அரசு அலுவலங்கள் இருக்கின்றது. இதன் பின்னணி யார் என்பது வெளியில் வர வேண்டும். மெத்தனால் போன்ற மூலப்பொருட்கள் ஆந்திராவில் இருந்து வந்து இருக்கின்றது. இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். காவல் துறை மீது மட்டும் நடவடிக்கை இல்லாமல் காரணமானவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிர் இழந்தவர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு தேவையானவற்றை செய்ய வேண்டும். எதிர்க்கட்சி தலைவரும், எங்களின் சட்டமன்ற உறுப்பினரும் இது குறித்து சுட்டிக்காட்டிய போதே, ஆட்சியாளர்கள் சரி செய்திருக்க வேண்டும். கடந்த தேர்தலை விட ஆறு சதவீதம் குறைவான வாக்குகளை தான் திமுக வங்கி இருக்கிறது. எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வரும். காவல் துறையினர் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகின்றனர். எங்கள் மீதான அடக்கமுறையை விட்டுவிட்டு கஞ்சா விற்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் விற்ற விவகாரத்தில் காவல்துறையினரின் கையை கட்டி போட்டது யார்?
கோவை மாவட்டத்திற்கு அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுக. கோவை மாவட்ட மக்களை இனியும் புறக்கணிக்காமல் திட்டங்களை கொண்டு வர வேண்டும். கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும். காவல்துறையினர் அதிமுக ஆட்சியில் சுயமாக செயல்பட்டனர். காவல்துறையினர் சுயமாக செயல்பட்டால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. நிறைய பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். தேவையான அனைத்து மருந்துகளையும் வாங்கி வைக்க வேண்டும். எப்பொழுது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். பல வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்து இருக்கிறோம். தோல்விகளை கண்டு துவண்டு விட மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu