விவாகரத்து வாங்காமல் இரண்டாவது திருமணம் செய்த பெண் மீது கணவர் புகார்
நவுஷத்
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தாயுடன் வந்த நவுஷாத் என்ற நபர் தன்னுடைய மனைவிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தன்னுடைய 6 வயது மகளை என்னிடம் சேர்த்து வைக்க வேண்டுமென மனு அளித்தார். இது குறித்து நவுஷாத் அளித்த பேட்டியில் தனக்கும், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நவுஷாத் ரசீனா நிலாபர் என்பவருக்கும் கடந்த 2018 ஆண்டு திருமணம் நடைபெற்றது. தங்களுக்கு ஷிப்ரா மரியம் என்ற 6 வயதுள்ள பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் எனக்கும் எனது மனைவி ரசீனா நிலாபருக்கும் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 16.05.2022-ம் தேதியன்று எனது மனைவி ரசீனா நிலாபர் குழந்தையை எடுத்துக் கொண்டு என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் நான் பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடத்தி எனது மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வாழ முயற்சிகள் மேற்கொண்டும், பள்ளிவாசல் மூலம் முயற்சித்தும் எனது மனைவி என்னோடு சேர்ந்து வாழ முன்வரவில்லை.
வேறுவழியில்லாமல் நான் கோவை குடும்பநல நீதிமன்றத்தில் எனது மனைவியை என்னோடு சேர்த்து வைக்கக் கோரி வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நான் எனது குழந்தையை பார்ப்பதற்கும் எனது மனைவி அனுமதிக்காததால் குழந்தையை பார்ப்பதற்கு அனுமதி கோரி மேற்படி நீதிமன்றத்திலேயே இடைக்கால மனு தாக்கல் செய்தேன். அதில் மாதம் ஒரு முறை நான் எனது குழந்தையை பொது இடத்தில் வைத்து பார்ப்பதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. எனது மனைவி என்னிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொள்ளாமலேயே கடந்த 21.12.2023-ம் தேதியன்று மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஷாகுல் ஹமீது என்ற நபரை மலபார் முஸ்லீம் ஜமாத்தில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அது குறித்து எனக்கு தெரியவந்து, நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். மேலும் எனது மனைவி எனது மகளை தனியாக அவரது வயதான பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு, மேட்டுப்பாளையத்தில் இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். எனது பெண் குழந்தை தனியாக இருப்பது, பாதுகாப்பற்ற ஒன்றாகும் என்று ஒரு தகப்பனாக மனமுடைந்து, நான் எனது குழந்தையை என்னிடம் கொடுக்கும்படி எனது மனைவியிடம் கேட்ட போது, அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். மனைவி என்னிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கு முன்பாகவே அவருக்கு சட்டத்திற்கு முரணாக இரண்டாவது திருமணம் செய்து வைத்த மலபார் முஸ்லீம் ஜமாத் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், பெண் குழந்தையை பாதுகாப்பற்ற சூழலில் விட்டுவிட்டு சென்ற எனது மனைவியின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், எனது பெண் குழந்தையை எனது பாதுகாப்பில் கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu