அனைத்து அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் துவங்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Govt.Hospitals Paid Bedrooms
கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 163.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய உயர் சிறப்பு மருத்துவ கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் புற்றுநோயைத் துல்லியமாக கண்டறிவதற்கு இரண்டு இடங்களில் மட்டுமே பெட் சிடி ஸ்கேன் இருந்தது. தற்போது கோவை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், காஞ்சிபுரம் போன்ற 5 மாவட்டங்களில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைகளிலும் இந்த பெட் சிடி ஸ்கேன்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மேலும் இன்று கோவை அரசு மருத்துவமனையில் 26 கட்டண படுக்கையறைகள், 100 தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள், 300 படுக்கை வசதிகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் இந்த மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வால்பாறை, உடுமலைப்பேட்டை, வீரபாண்டி, ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அதே போல கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மருத்துவத் துறைக்கு என 397.71 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் மழை நீர் தேக்கத்தை போக்கும் விதமாக 10 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது. மேற்கு மண்டலத்தில் உள்ள 4 மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடையும் வகையிலான மருத்துவத்துறை அறிவிப்புகள் பெரிய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண படுக்கையறைகள் படிப்படியாக துவங்கப்பட உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக புதிய தேர்வாளர்களுக்கு கவுன்சிலிங் வைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu