கோவையில் காலாவதியான உணவுப் பொருள்கள் குளிர்பானங்கள் பறிமுதல்
பைல் படம்
கோவையில் நடத்தப்பட்ட கள ஆய்வில் 38 கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையாளர் மற்றும் ஆட்சியர் ஆகியோரது உத்தரவின் பேரில், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய எட்டு குழுக்கள், கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 10-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
பழச்சாறு கடைகள், குளிர்பான விற்பனை கடைகள், பேக்கரி, பானி பூரி கடைகள் மற்றும் தற்காலிக தள்ளுவண்டிகளில் பொது மக்களுக்கு விற்கப்படும் பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களை விற்பனை செய்பவர்களையும், உணவு வணிகர்கள் உணவுப் பொருட்களின் தரம், காலாவதி தேதி மற்றும் கலப்படம் தொடர்பாகவும் பேருந்து நிலைய பகுதிகள், ரெயில்வே நிலையம், அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, திருச்சி ரோடு, விளாங்குறிச்சி ரோடு, மசக்காளிப்பாளையம் ரோடு, காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ஆர். எஸ். புரம், சூலூர், கிணத்துக்கடவு, மதுக்கரை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், சரவணம்பட்டி, ராமநாதபுரம், குனியாமுத்தூர் போன்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகள் மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
18 கடைகளுக்கு நோட்டீஸ்..
கள ஆய்வு செய்யப்பட்ட 270 கடைகளில் 38 கடைகளில் ரூ. 15, 225- மதிப்புள்ள 51 கிலோ பழ வகைகள் மற்றும் பேக்கிங் தேதி போடாமலும் மற்றும் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைத்திருந்த 47 லிட்டர் குளிர்பானங்கள் கண்டறியப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும் மேற்படி காலாவதியான நிலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இக்கள ஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவு தரம் இல்லாத பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தில் இருந்தது கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை வைத்திருந்த 8 கடைகளுக்கு மொத்தம் ரூ. 16, 000- அபராதம் விதிக்கப்பட்டு அரசு கருவூலக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இக்கள ஆய்வானது தொடர்ந்து மாவட்டம் முழுவதும் திடீர் கள ஆய்வாக நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடு அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால் 94440 42322 என்ற கைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம். இது தொடர்பான புகார் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu