அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன் கண்டனம்
வானதி சீனிவாசன்
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்த நவீன உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிககிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அதிக மழை, அதிக வெப்பம் என பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒரு பக்கம் வறட்சி, இன்னொரு பக்கம் மழை வெள்ளம் என பெரும் பாதிப்புகளை நம் நாடு சந்தித்து வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமானல் காடுகளைப் பாதுகாக்க வேண்டும். காடுகளைப் பாதுகாக்க வேண்டுமானால் யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் யானைகள், புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காடுகளின் பரப்பும் அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் 20 யானை வழித்தடங்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கண்டறிந்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்தவொரு வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு பின்பற்றுவதில்லை. தன்னிச்சையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. யானை வழித்தடமாக ஒரு பகுதி அறிவிக்கப்பட்டு விட்டால், அது பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படும். அங்கு வேறு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புகளை சந்திப்பார்கள்.
தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள யானை வழித்தடங்களில் நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் கிராமங்களும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியைச் சேர்ந்த, 46 கிராமங்கள் இதில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மலை கிராமங்கள், மலையடிவார கிராமங்கள் இதில் வருகின்றன. யானைகள் வழித்தடத்தை, வலசை பாதையை காக்க வேண்டும் என்ற கடமை எல்லோருக்கும் உள்ளது. அதை மக்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் நோக்கத்துடன் 42 யானை வழித்தடங்களை கண்டறிந்திருப்பதாகக் கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.
காலங்காலமாக பழங்குடியின மக்களும், மற்றவர்களும் வசிக்கும் இடத்தை பறிக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும். யானை வழித்தடங்கள் தொடர்பாக இணையதள வாயிலாக கருத்து கேட்காமல் மக்களின் இருப்பிடத்திற்கு சென்று நேரடியாக கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு திமுக அரசு மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu