கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:

2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர், களப்பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், வாகன ஓட்டுனர் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத ஊதியமாற்ற நிலுவைத்தொகை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும்.

2003-2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.அரசாணை எண் 56-ல், இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்ப்புக் குழுவினை ஏற்று செய்யவேண்டும்.

மேலும், பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்கள் மற்றும் 100, 101 ஆகியவற்றை ரத்து செய்யவேண்டும். 5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படுவதை கைவிட வேண்டும். 3,500 தொடக்கப்பள்ளிகளை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும்.அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணி மாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும்.

கடந்த 56 ஆண்டுகளாக தமிழக ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வந்த ஓய்வூதியத்தை, 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதியில் இருந்து அரசு ரத்து செய்ததை திரும்ப வழங்க வேண்டும். இது புதிய கோரிக்கை அல்ல; பறிக்கப்பட்ட எங்களுடைய ஜீவாதார, வாழ்வாதார உரிமையை திரும்ப வழங்கவேண்டும்.ஆரம்பத்தில் கவர்னர்கள், முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை;

இப்போது வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் வழங்கப்படாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், காலம் காலமாக ஓய்வூதியம் பெற்று வந்தவர்களுக்கு இப்போது ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது. இந்த அநீதியை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட துறைவாரி சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக பட்ஜெட்டில் ஏமாற்றம்..

தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எந்த கோரிக்கையும் இடம்பெறவில்லை. இதனால் இந்த நிதிநிலை அறிக்கை அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதுடன், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

தங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 21 மாநில அளவில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், மார்ச் 21 முதல் 24 வரை 60க்கும் மேற்பட்ட துறைவாரி சங்கங்கள் பங்கேற்ற பிரசார இயக்கமும், மார்ச் 28 ல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்ற ஒருநாள் வேலை நிறுத்தமும் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்.19ல் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!