சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி: கோவை நீதிமன்றம் அனுமதி
கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்.
கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடியூபர் சவுக்கு சங்கர் முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக காவலில் எடுத்து மூன்றுநாள் விசாரிக்க பந்தய சாலை காவல் துறையினர் கோவை குற்றவியல் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக கோவை நீதிமன்றம் அழைத்து வரபட்டார்.
அப்போது என்னை பார்த்து அஞ்சும் அளவிற்கு திமுக அரசு இருக்கிறது. அதனால் தான் என் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என ஆவேசமாக பேசியபடி சவுக்கு சங்கர் சென்றார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரின் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “சவுக்கு சங்கர் மீது 90 நாட்களுக்கு முன்பு இரண்டாவது புதிய வழக்கு ஒன்று போட்டிருந்தார்கள். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்கள். அதற்காகத்தான் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். ஆரம்பத்தில் இருந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு என தருவோம் கூறியிருந்தோம்.
தேவர் பற்றி தவறாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள். அந்த வீடியோவில் அவ்வாறு இல்லை. நான்கு நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது போட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. சங்கர் பேட்டியில் பொது அமைதிக்கு எந்த குந்தமும் விளைவிக்கப்படவில்லை என சில அறிவுரைகளை நீதிமன்றம் கூறி இருக்கிறது. அந்த வீடியோவை வைத்து 17 வழக்குகள் போட்டார்கள். எங்கே வெளியில் வந்துவிடுவோரோ என அனைத்து வழக்குகளிலும் அவசரமாக கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதனால் அவசரமாக கைது செய்துள்ளார்கள். காவல்துறைக்கு புரிகின்ற பாஷையில் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றம் இவர்களுக்கு பதில் கூறும்.காவல்துறையினர் தவறை தெரிந்து செய்கிறார்களா? தெரியாமல் செய்கிறார்களா?
எந்த பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக கூறினார்களோ, அந்த பெண் போலீஸ்காரர்களை வைத்து தண்ணீர் குடிக்க முடியாமல் சிறுநீர் கழிக்க முடியாமல் இருக்கும் அளவிற்கு அவர்களை சவுக்கு சங்கர் உடன் அனுப்புகிறார்கள். சங்கர் தைரியமாக இருக்கிறார். போலீசார் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். எங்களை காப்பாற்றுங்கள் என எங்களிடம் கேட்கும் நிலைமையில் தான் அவர்கள் இருக்கிறார்கள். பேரறிவாளன் தாய் அற்புதம்மாளை போல தற்போது கமலா அம்மா சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார். திரும்பவும் இந்த அரசாங்கத்துக்கும் காவல்துறைக்கும் ஒரு விஷயத்தை கூறுகிறோம். நீங்கள் போடும் வழக்கு தூக்கு தண்டனை பெரும் வழக்கல்ல. ஐந்து வருடம் தண்டனை கிடைத்தாலும் திரும்பவும் வந்து சங்கர் பேசத்தானே போகிறார்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu