மதம் மாற சொல்லி துன்புறுத்தியதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் மனு
குடும்பத்துடன் மனு அளிக்க வந்த மனோஜ்குமார்.
கோவை மருதமலை பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் வேலைக்கு சென்ற இடத்தில் மதம் மாற சொல்லி அடித்து துன்புறுத்தியதாகவும் தன்னுடைய கல்லூரி சான்றிதழ்களை வாங்கி வைத்து கொண்டு தர மறுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் வேலை செய்ததற்கான சம்பளத்தையும் தர மறுப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இது குறித்து மனோஜ்குமார் அளித்துள்ள மனுவில், தான் தொண்டாமுத்தூர் அரசு கல்லூரியில் படித்துள்ளதாகவும் கடந்த 2021 ஆம் ஆண்டு எங்கள் வீடு உள்ள பகுதியில் வினியா என்பவர் இடம் வாங்கிய நிலையில், அவர் தனது குடும்ப சூழலை பார்த்து அவரது நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
சிறிது காலம் கழித்து நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு தன்னை அழைத்துச் சென்று வீட்டு வேலை வாங்கி தந்ததாகவும், அப்போது தன்னை அடித்து துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்கும் தன்னை அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இரண்டு ஆண்டுகளாக எவ்வித சம்பளமும் தராமல் வேலை வாங்கி துன்புறுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் என்னுடைய கல்லூரி சான்றிதழ்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் சம்பளத்தை கேட்டால் தன்னை அவர்களது மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தியதாகவும், அதுமட்டுமின்றி அவரது நண்பரை அழைத்தும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்து கோவிலுக்கு சென்று வருகிறேன் என கூறி தப்பி வந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள மனோஜ் குமார் வினியா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் இருந்து தனது கல்லூரி சான்றிதழ்கள் இரண்டு வருட சம்பளத் தொகையை பெற்று தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இவரது தாயார் கூலி வேலை செய்து வருவதும், இவரது தந்தை மாற்றுத்திறனாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu