கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சசிகலாவிடம் சிபிசிஐடி விசாரிக்க முடிவு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சசிகலாவிடம் சிபிசிஐடி விசாரிக்க முடிவு
X

பைல் படம்

ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினர்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சசிகலாவிடம் சிபிசிஐடி விசாரிக்க முடிவு.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது.இந்த பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலத்தை

சேர்ந்த கனகராஜ் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு குற்றவாளியான சயான் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி, மகள் இறந்தனர்.தொடர்ந்து, அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்கள் இந்த வழக்கில் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக தமிழக அரசு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் தனிப்படை அமைத்தது. ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க தொடங்கினர்.

சம்பவம் நடந்த கொடநாடு எஸ்டேட்டிலும் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர். மேலும் இது தொடர்பாக கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நட்ராஜ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் என 300-க்கும் மேற்பட்டோரிடம் தனித் தனியாக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சில மாதங்களுக்கு முன்பு திடீரென சி. பி. சி. ஐ. டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி , கூடுதல் எஸ். பி முருகவேல் தலைமையிலான சிறப்பு பிரிவினர் கொடநாடு வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். அதனால் அங்கு மாயமான பொருட்கள் என்ன? கொள்ளை சம்பவம் குறித்து ஏதாவது தெரியுமா? என்பது குறித்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் டிரைவாக வேலை பார்த்து வந்துள்ளார்.அந்த வகையில் ஆறுக்குட்டியிடம் சிபிசிஐ டி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே சிபிசிஐ டி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் இறந்து போன கனகராஜ் குறித்த முக்கிய தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்து விட்டு, 2 பிரிவாக பிரிந்து சென்று விட்டனர். கனகராஜ் நேராக தனது சொந்த ஊரான சேலம் எடப்பாடிக்கு சென்று விட்டார்.

கொள்ளை சம்பவம் நடந்த 4 நாட்கள் கழித்து விபத்து நடந்த அன்று காலை கனகராஜ், தனது மனைவியுடன் எடப்பாடியில் உள்ள ஜோதிடர் ஒருவரை பார்க்க சென்றுள்ளார். ஜோதிடரிடம் தனது ஜாதகத்தை கொடுத்து தனக்கு நேரம் எப்படி இருக்கிறது. பிரச்னைகள் ஏதாவது இருக்கிறதா? என கேட்டுள்ளார். அதனை ஆராய்ந்த ஜோதிடர், கனகராஜிடம், உனக்கு இன்றைய தினம் ஒரு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது. அதனை மட்டும் கடந்து விட்டால் உன்னை எதுவும் நெருங்காது என தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த அன்றைய தினம் இரவே கனகராஜ் விபத்தில் இறந்து விட்டார்.

இந்த தகவல்களின் அடிப்படையில் கனகராஜ் சந்தித்த ஜோதிடர் யார் என்பது குறித்து விசாரித்தனர். தற்போது அவர் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் அவரின் பெயர், விவரத்தை தெரிவிக்க மறுத்து விட்டனர். கனகராஜ் சந்தித்த ஜோதிடரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிசிஐ.டிபோலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக அவருக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உள்ளனர். அவர் விசாரணைக்கு ஆஜராகும் போது, கனகராஜ் ஜாதகம் மட்டும் பார்த்தாரா? அல்லது வேறு ஏதாவது தகவல்களை உங்களிடம் தெரிவித்தாரா? கனகராஜூக்கு ஆபத்து இருப்பது எப்படி தெரியும் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது கனகராஜ் தான். ஆனால் அவரும் இப்போது உயிருடன் இல்லை. இதனால் இந்த கொள்ளைக்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்கள் யார் என்பதே சிபிசிஐ.டி போலீசாரின் தேடுதலாக உள்ளது. தொடர்ந்து அதனை நோக்கி பயணித்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த 20- ஆம் தேதி, இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலராக இருந்த உதவி கமிஷனர், கனகராஜிடமும் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!