பொங்கல் பரிசு தொகை ரூ. 1.22 லட்சம் கையாடல்: ரேசன் கடை ஊழியர் மீது வழக்கு
சாய்பாபா காலனி காவல் நிலையம் (கோப்பு படம்).
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் கடந்த 10ம் தேதி முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள 11 லட்சத்து 4942 ரேஷன் கார்டுகளுக்கு சம்மந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்களிடம் பணம் வழங்கப்பட்டு இருந்தது. இதில் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 876 கார்டுகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 73 ஆயிரத்து 66 கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் அந்தந்த ரேஷன் கடை பொறுப்பாளர்கள் மீதமுள்ள தொகையை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஆனால் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அமுதம் அங்காடி என்ற ரேஷன் கடையில் விற்பனையாளாராக பணியாற்றும் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மதியரசு என்பவர் பொங்கல் பரிசு தொகை பணத்தை திரும்ப செலுத்தாதது தெரியவந்தது.
இது குறித்து அமுதம் அங்காடியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 841 குடும்ப அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில், 719 பேருக்கு முறையாக பணத்தை கொடுத்து இருப்பதும், 122 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வாங்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஊழியர் மதியரசு பணத்துடன் தலைமறைவானார். இது குறித்து கடை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதியரசு மீது சாய்பாபா காலனி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள மதியரசுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர். பொங்கல் பரிசுத் தொகையை கையாடல் செய்த ரேசன் கடை ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu