நடிகர் பார்த்திபன் புகாரின் பேரில் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு
பார்த்திபன்
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரியல் வோர்க்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்பவர், நடிகர் பார்த்திபன் இயக்கி வரும் டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான மேற்பார்வையாளராக இருந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 அல்லது 20 ஆம் தேதிக்குள் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான அனைத்து பணிகளையும் முடித்துக் கொள்வதாக கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு கட்டணமாக சிவபிரசாத் 68 இலட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் கேட்ட நிலையில், பார்த்திபன் 42 இலட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.
மேலும் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பிப்ரவரி மாதத்திற்குள் முடித்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்காத நிலையில் பார்த்திபன் ஏப்ரல் 19ஆம் தேதி வரை கால நீட்டிப்பு கொடுத்துள்ளார்.
இருப்பினும் நான்கில் ஒரு பங்கு பணிகளை மட்டுமே முடித்த சிவப்பிரசாத், படத்தின் முக்கிய கிராபிக்ஸ் காட்சிகளை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். இதனிடையே சிவப்பிரசாத் கடந்த மாதம் நான்காம் தேதி கிராபிக்ஸ் கட்சிகளுக்கான கட்டணமாக 88 இலட்சத்து 38 ஆயிரத்து 120 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என பார்த்திபனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
ஒப்பந்தத்தை மீறி கூடுதலாக பணம் கேட்டதும், குறிப்பிட்ட தேதியில் பணிகளை முடித்துக் கொடுக்காததும் தெரியவந்துள்ளது. இவ்வாறான சூழலில் தன்னை ஏமாற்றியதாக பார்த்திபன் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிவபிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu