மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு
பைல் படம்
கோவை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர், பாலமுருகன், இவர், கடந்த 14ஆம் தேதி காங்கேயம் பாளையம் பகுதியில் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பாலமுருகனுக்கு நேற்று, மூளைச் சாவு, ஏற்பட்டதை அடுத்து அவரது உடல் உறுப்புகளான சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், உள்ளிட்டவை ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.இதயம், நுரையீரல், மற்றும் கல்லீரல் ஆகிய மூன்றும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனைக்கும் மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டடது. இந்த சம்பவம், கோவை அரசு மருத்துவமனையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உறுப்பு தானம் ஒரு உன்னதமான செயல்: இதை செய்வதன் மூலம் பலருக்கு உயிர் கொடுக்கலாம். தற்போதைய சூழ்நிலையில், சிறுகுடல், சிறுநீரகம், கண்கள், கல்லீரல், இதயம் மற்றும் தோல் திசுக்கள் போன்ற உறுப்புகளுக்கு அதிக தேவை உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான மக்கள் விபத்துகளால் இறக்கின்றனர், அவர்களின் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுக்கு உயிர் கொடுக்கின்றன. சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், குடல் போன்ற உறுப்புகளை நாம் உயிருடன் இருக்கும்போதே தானம் செய்யலாம். பெரும்பாலானவை 6 முதல் 72 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. ஒரு நன்கொடையாளர் குறைந்தது எட்டு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும்.
உறுப்பு தானம் என்பது மனிதர்களிடமிருந்து ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் உறுப்புகள் பிரித்தெடுக்கப்படும் ஒரு செயல்முறையாகும். பின்னர் இந்த உறுப்புகள் நன்கொடையாளர் உயிருடன் இருக்கும்போது அல்லது நன்கொடை யாளரின் குடும்பத்தின் அனுமதியுடன் இறந்த நிலையில், சட்டப்பூர்வமாக மற்றொரு தேவையுள்ள நபருக்கு மாற்றப்படும். இதன்மூலம், உடல் உறுப்பு தானம் மூலம் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். உறுப்பு தானத்தின் முக்கியத்து வத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைச் செய்ய மக்களை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உலக உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.
மரணத்திற்குப் பிறகும் சமூகத்தின் நல்வாழ்வுக்காக ஒரு தனிநபரின் தொடர்ச்சியான பங்களிப்பையும் இது உறுதி செய்கிறது. நாம் அனைவரும் நம் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். பல்வேறு பிரச்சாரங்கள் மூலம் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்ப வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் பல மனிதர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu