கோவை தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனையால் பரபரப்பு

கோவை தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனையால் பரபரப்பு
X

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் 

கோவை தனியார் பள்ளிக்கு நேற்று வந்த அதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது.

கோவை அவிநாசி சாலையில் ஸ்டேன்ஸ் என்ன ஆங்கிலோ இந்தியன் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கே நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும், அது வெடித்து சிதறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவ மாணவிகளை வெளியேற்றினர். தொடர்ந்து இது குறித்து மாநகர போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள், பள்ளி நுழைவாயில், வளாகம், வகுப்பறை உள்ளிட்ட ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இன்று அந்தப் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. நேற்று வந்த அதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்தது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் பந்தய சாலை காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு நிபுணர்கள் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படாத நிலையில், அது புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!