நூலகங்களாக மாறும் ஆட்டோக்கள் ; மாநகர காவல் துறையின் அசத்தல் முயற்சி
ஆட்டோ ஓட்டுநர்களுடன் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்
செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் தாக்கத்தால் நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு திறன் என்பது குறைந்து வருகிறது. இந்த நிலையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும், காவலர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில் நூலகங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஒய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், பயணிகள் பயணத்தின் போது நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும் ஆட்டோக்களில் மினி நூலகம் அமைக்கப்பட்டது. மக்களிடம் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கும் வகையில் ஆட்டோ நூலகம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது கட்டமாக 500 ஆட்டோக்களுக்கு நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் மற்றும் அதை வைக்கும் பெட்டிகளையும் வழங்கினார்.
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆட்டோ நூலகத்தில் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டு வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu