மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க தயார் - கோவையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்கள்
அதிமுக போஸ்டர்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த நிலையில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டியும், கூட்டணியை குறிப்பிட்டும் அம்மா பேரவை கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில் 76 வது பிறந்தநாள் காணும் புரட்சித்தலைவியை (ஜெயலலிதா) வணங்குகிறோம் எனவும், "தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் எத்தனை கூட்டணியோடு யார் வந்தாலும் எங்களோடு யார் கூட்டணி வந்தாலும் கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் நாளையும் நமதே! நாற்பதும் நமதே! என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி மற்றும் அம்மா பேரவை கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் என சிலரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையாததன் காரணமாக அதிமுகவினர் இதுபோன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu