கோவையை புறக்கணிக்கும் ரயில்வே: துண்டு பிரசுரங்கள் வழங்கிய அனைத்து கட்சிகள்

கோவையை புறக்கணிக்கும் ரயில்வே: துண்டு பிரசுரங்கள் வழங்கிய அனைத்து கட்சிகள்
X

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கிய அனைத்து கட்சியினர்

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை அனைத்து கட்சியினர் விநியோகித்தனர்.

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ஆறு ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் போத்தனூர் ரயில் நிலையம் வழியாக திருப்பி விடப்படும் என ஏற்கனவே தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு கோவையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

ஆறு ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் செல்வதற்கு எதிராகவும், கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோவை மத்திய ரயில் நிலையத்தில் அவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். மேலும் கோவையில் இருந்து ரயில் பயண சீட்டு எடுத்து கோவையிலிருந்து நாகர்கோயில் வரை செல்லும் கோவை -நாகர்கோயில் பயணிகள் ரயிலில் பயணம் செய்து ரயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து, கோவையை புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இதைத் தொடர்ந்தும் தங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்டமாக வருகிற 7ஆம் தேதி கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து ரயில் நிலையம் வரை அனைத்து கட்சி தலைவர்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து ரயில்வே அதிகாரிகளிடம் மனு வழங்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!