மின்கட்டண உயர்வை கண்டித்து கோவையில் அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ.
மின்சார கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் உட்பட பல்வேறு கூட்டணி அமைப்பினர் பொதுமக்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் நியாய விலை கடைகளில் பொருட்களை வழங்க வலியுறுத்தியும் திமுகவை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அம்மன் அர்ச்சுனன், தமிழக மக்களுக்காக பாடுபடக்கூடிய ஒரே இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் என்றார். அனைவருக்கும் மின் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் நேற்று வீட்டிலிருந்தபொழுது மின்சாரம் போய் மூன்று மணி நேரம் ஆகிவிட்டதாகவும் இதற்காக தனது மனைவி தன்னை திட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொழிற்சாலைகள் இன்றைய நாட்களில் நஷ்டத்தில் இயங்குவதாகவும் தீபாவளிக்கு போனஸ் கொடுப்பது போல் திமுக அரசு மூன்று ஆண்டுகளில் மூன்று முறை போனஸ் வழங்கியுள்ளதாக மின்சார கட்டண உயர்வை சுட்டி காட்டினார். தமிழகத்தில் அனைத்து வரியையும் உயர்த்தி விட்டீர்கள் எனவும் காய்கறிகள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டு விட்டதாக பாமர மக்கள் 20 ஆயிரம் ரூபாய் இருந்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற சூழல் இருப்பதாக கூறினார். இந்த ஆட்சி கூடிய விரைவில் வீட்டுக்கு போக வேண்டும் என்று மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சிறு குறு தொழில் துறையினர் அவர்களது மனைவியின் தாலியை விற்றா மின்சார கட்டணங்களை கட்ட முடியும்? என கேள்வி எழுப்பிய அவர், பாமர மக்கள் உயர வேண்டும் என்றால் இங்கு சிறு குறு தொழில்கள் உயர வேண்டும் என்றார். இந்த விலை உயர்வுகளினால் தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்கள் வேறு மாநிலத்திற்கு செல்வதற்கு தயாராக இருப்பதாகவும், இதற்கு காரணம் மின் கட்டண உயர்வு தான் என தெரிவித்தார். தொழில்கள் அனைத்தும் முடங்கி போவதாகவும், தொழிற்சாலையில் இருக்கின்ற பொருட்கள் அனைத்தும் பழைய பாத்திரங்கள் கடைக்கு செல்வதாகவும், இதற்கெல்லாம் காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் எனவும் குற்றம் சாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu