சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம்
X

அதிமுக கவுன்சிலர்கள் 

மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் சர்மிளா , பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாநகராட்சியில் சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலையில் முக்காடு போட்டபடி வந்துள்ளதாகவும்,6 சதவீத வரியினை திரும்ப பெற வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

இதனைதொடர்ந்து கோவை மாநகராட்சி கூட்டம் துவங்கிய நிலையில் சொத்து வரி உயர்வுக்கு காங்கிரஸ் , சிபிஐ, சிபிஎம் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி மேயர் ரங்கநாயகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், அதிமுக கவுன்சிலர்களை மேயர் ரங்கநாயகி சமாதானப்படுத்தினார். அப்போது சொத்து வரி குறித்து அரசிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ரங்கநாயகி தெரிவித்த நிலையில், அவரது வாக்குறுதியை ஏற்க மறுத்து கவுன்சிலர்கள் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

இதே போல் கோவை மாநகராட்சியில் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தை ஈஷா யோகா மையம் பராமரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஒப்பந்தந்தை நீடிக்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ராமமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஈஷா யோகா மையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் மாயன பராமரிப்பு பணிகளை மீண்டும் அவர்களுக்கு வழங்கக் கூடாது என வலியுறுத்தினார்.

இதனையடுத்து ஆத்துப்பால மின் மயான பராமரிப்பை ஈஷா மையத்திற்கு வழங்கும் தீர்மானத்தை நிறுத்தி வைப்பதாக கூறிய மேயர் ரங்கநாயகி, அடுத்த மாதம் இதுகுறித்து விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற வாக்குவாதங்களால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!