குடியுரிமை திருத்தச் சட்டம் ஏற்கத்தக்கது அல்ல; கோவையில் தமிழக வெற்றிக் கழக போஸ்டர்களில் கண்டனம்
கோவையில் தவெக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டதாக நேற்று முன்தினம் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும் இச்சட்டத் திருத்ததிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சியினர் அரசியல் தலைவர்கள் மத்திய அரசிற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் விஜய்யும் இந்த சட்டத்திற்கு கண்டனங்களை பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் இந்த சட்டம் ஏற்கத்தக்கது அல்ல எனக் குறிப்பிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் கோவைத் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் "பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) ஏற்கத்தக்கது அல்ல" "Withdraw CAA" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu