‘அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’- நடிகர் ரஞ்சித் திடீர் வாய்ஸ்
நடிகர் ரஞ்சித்
தமிழ் திரைப்பட நடிகர் ரஞ்சித் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகை திரிஷா விவகாரத்தில் யாரும் தனிப்பட்ட முறையில் தெரியாது. நாகரீகம் என்பது எல்லோருக்கும் அடங்கிய ஒரு விஷயம். எல்லாரும் செய்யும் வேலை போன்று நடிப்பு என்பதும் ஒரு வேலையே. பொதுவாகவே கூத்தாடிகள் என்ற கண்ணோட்டம் மக்களுக்கு இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் நடிக்காத ஆள் இல்லை. இப்படி மனதை காயப்படுத்தும்படி அவர் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற பேச்சு அரசியல் மீது ஒரு அருவருக்கத்தக்க எண்ணத்தை கொண்டு வருகிறது. இது போன்ற பேச்சுக்களை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் எனது முழு ஆதரவும் திரிஷாவிற்கு உள்ளது. தமிழ்நாட்டில் நூற்றுக்கு 90 சதவிகிதம் மதுதான் இருக்கிறது. தமிழகத்தில் அரிசி விவசாயம் போய் மது விவசாயம் தான் தற்போது உள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசாங்கம் அமைக்கும் போதும் மதுவை படிப்படியாக குறைபோம் என்று கூறிவிட்டு, கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் ஆரம்பித்தது முதல் மதுவை ஒழிப்போம், புகையிலை ஒழிப்போம் என்றார்கள். ஒழித்தார்களா? கல்வியை இலவசம், மருத்துவம் இலவசம் என்று கூறினார்கள். ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய், 12000 ரூபாய் என பணம் வாங்கிக் கொண்டு கேவலமாக திருடர்களுக்கு வாய்ப்பை கொடுக்காதீர்கள். தேர்தல் நேரத்தில் பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிலர் கட்சி மாறுவது உண்டு.
விஜயதரணி பாரதிய ஜனதாவிற்கு மாறியது என்ன காரணத்திற்கு என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் ஒரு நல்லாட்சி அமைய வேண்டும். நல்ல மாற்றம் வர வேண்டும் என்று மக்களோடு மக்களாக எனக்கும் ஒரு சிந்தனை உண்டு. ஏற்கனவே திருடியவர்கள் மட்டுமே திருடிக் கொண்டிருக்க வேண்டும். புதிதாக யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று புதிதாக அரசியலுக்கு வருபவர்களை தூற்றுகின்றனர். ஒரு விஜய் அல்ல ஓர் ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது. இதுவரை வாக்குறுதி கொடுத்தவர்கள் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எந்த நீதிமன்றமும் அவர்களை தண்டிக்கவில்லை. மக்களிடம் தவறான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யாரும் தவறான வாக்குறுதிகளை கொடுத்து விட்டோம் என்று நினைக்கவில்லை.
புதிதாக நல்லவர்கள் யாராவது வந்தால் ஒன்று தங்கள் கூட்டணியில் இணைத்து விடுவார்கள் அல்லது அவர் மீது சாக்கடையை வீசி தனிமனித வன்மத்தை கூறி அவர்களை அழித்து விடுவார்கள். நடிகர் என்ற அடிப்படையில் பல கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கின்றனர். ஏற்கனவே சில அரசியல் கட்சிகளில் இருந்து அனுபவங்கள் உள்ளதால் கொள்ளையடித்த எவனுக்கும் என் வாழ்க்கையில் மைக் பிடித்து பேச மாட்டேன். எத்தனை கோடி கொடுத்தாலும் எனது மனது நேர்மையானவர்களுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் என எண்ணும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த வாய்ப்பு கிடைத்தால் தான் அண்ணாமலை யார் என்பதை அவரால் நிரூபிக்க முடியும். எந்த விஷயத்திலும் துணிச்சலாக செயல்படக் கூடியவர். அப்படிப்பட்ட ஒரு அதிகாரி பதவியை துறந்து மக்களுக்காக பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்றால். அது ஒரு சிறந்த அடிப்படை தான். பாமக தலைவர் அன்புமணியை எனக்கு மிகவும் பிடிக்கும். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் வெளிநாடுகளிலும் பெயர் பெற்றவர். திறம்பட நிர்வாகம் செய்தவர், மதுவுக்கும் கலாச்சார சீரழிவுக்கும் எதிராக இருப்பவர். சமூக சிந்தனையுள்ள அறிவான தலைவர்.
இவ்வாறு நடிகர் ரஞ்சித் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu