என் தகுதி பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை - ஆ.ராசா
ஆ.ராசா
கோவை சரவணம்பட்டி பகுதியில் வருகின்ற 11ம் தேதி பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அமைச்சர் முத்துசாமி, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற 11 ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பில்லூர் 3 வது திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டது. இதனால் வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கும் நிலை இருக்கிறது. பில்லூர் 3 திட்டத்தை துவங்கினால் கோவை மக்களுக்கு தினமும் தண்ணீர் கொடுக்க முடியும். கோவையில் உள்ள 22 லட்சம் மக்களுக்கும் 300 எம்.எல்.டி தண்ணீர் இருந்தால் தினமும் கொடுக்க முடியும். முதல்வர் உத்தரவின்படி இந்த திட்டத்தை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கொண்டு வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், “தேசிய பேரிடர் நிவாரணத்திற்கும், மாநில பேரிடர் நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ.கவினர் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். கவுண்டமணி வாழைப்பழக் கதை மாதிரி பேசுகின்றனர். எனக்கு என்ன தகுதி இருக்கின்றது என பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தை பயன்படுத்தியதற்கு பதிலாக, வேறு வார்த்தை பயன்படுத்திருக்க வேண்டும் என்று சொன்னால் அவரிடம் திரும்பி கேட்கின்றேன். உங்கள் கேபினட்டில் இருந்த ஒரு அமைச்சர், முதல்வர், கலைஞர், முதல்வரின் குடும்பத்தினரை அவதூறாக பேசி உயர்நீதிமன்றத்தில் இரு வழக்கு இருக்கின்றது. அதற்கு பின்னர் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து விட்டு, பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன். எம்ஜிஆர் முகத்தை வைத்து திமுக ஆட்சிக்கு வந்ததாக கூறுவது குறித்த கேள்விக்கு, அது தனி கதை அதை தனியாக பேசுவோம். அதற்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu