இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு..!
பிரின்ஸ் கால்வின்
கோவை பந்தய சாலை பகுதியில் சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரின்ஸ் கால்வின் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி ஆலயத்தில் ஒரு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரின்ஸ் கால்வின் பேசினார். அதில் இந்து மதம் குறித்தும், இந்து மதத்தில் உள்ள நபர்கள் குறித்தும் சர்ச்சைக்கு உரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ காட்சிகள் பேஸ்புக் மற்றும் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் பிரின்ஸ் கால்வின் பேசிய பேச்சுக்கள் நேற்று திடீரென சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவியது. இரண்டு நிமிடங்கள் பிரின்ஸ் கால்வின் பேசும் பேச்சு வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதை அடுத்து, பாதிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பினர் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கோவை பந்தய சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரியங்கா பந்தய சாலை காவல் நிலையத்தில் பாதிரியர் பிரின்ஸ் கால்வின் மீது புகார் அளித்தார். இதையடுத்து சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலய பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது இரு மதத்தினரிடையே பகையை ஊக்குவிக்கும் வகையில் பேசுதல், பிற மதத்தினரின் நம்பிக்கையை அவமதித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அந்த ஆலயத்தின் யூடியூப் பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu