கொள்ளையடித்த பணத்தில் ரூ.4.5 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்

கொள்ளையடித்த பணத்தில் ரூ.4.5 கோடிக்கு ஸ்பின்னிங் மில் வாங்கிய கொள்ளையன்
X

கைது செய்யப்பட்ட கொள்ளையன் மூர்த்தி.

கொள்ளையடித்த பணத்தில் ராஜபாளையத்தில் சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பின்னிங் மில் வாங்கியதும் தெரியவந்தது.

கோவையில் கடந்த இரண்டு வருடங்களாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த வழக்குகளில் ராட்மேன் (எ) மூர்த்தி மற்றும் அம்சராஜ் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் ராட்மேன் என்கிற மூர்த்தி கோவை மாநகரத்தில் மட்டும் 18 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 68 க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இவர் தனியாக திருட செல்லும்போது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டும், முழுக்கை சட்டை அணிந்தும் ரயில்வே டிராக் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு இரும்பு கம்பியை பயன்படுத்தி பூட்டினை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

மூர்த்தி தனித்தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும், தனியாக கொள்ளையடிக்கும் நகைகளை சந்திரசேகரன், பெருமாள், காளிதாஸ் மற்றும் ஒரு பெண் ஆகிய 4 பேரிடம் கொடுத்து பணமாக மாற்றியதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த பணத்தில் ராஜபாளையத்தில் சுமார் ரூ. 4.5 கோடி மதிப்பிலான ஸ்பின்னிங் மில் வாங்கியதும் தெரியவந்தது. இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தங்கநகைகள், பணம், விலையுயர்ந்த பைக்குகள், கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டுள்ளன. இவ்வழக்கு தொடர்பாக வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தலைமறைவாக உள்ள மனோஜ்குமார், சுதாகர், ராம்பிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்தக் கும்பல் தோராயமாக 1500 சவரன் கொள்ளையடித்துள்ளனர். அதில் கோவை மாநகரில் மட்டும் 376 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். 1.76 கோடி ரூபாய் வைர நகைகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil