பொள்ளாச்சியில் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்

பொள்ளாச்சியில் பெண்களிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சஸ்பெண்ட்
X

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமைக்காவலர் சபரிகிரி.

பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் சபரிகிரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. 58 வயதான இவர், கடந்த 27 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஜோதிநகர் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அவரது கழுத்தில் இருந்த, நான்கு பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர். அதே போல பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி அம்சவேணி (32)என்பவர் இருசக்கர வாகனத்தில் உடுமலை சாலையில் வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவரது கழுத்தில் இருந்த, இரண்டு பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்ததில், இரு பெண்களிடமும் நகைபறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி நகரம், உடுமலை சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 150 சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தலைமை காவலர் சபரிகிரி (41) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி உள்ளார். பின்பு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில், சிறப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தான் சபரிகிரி பெண்களிடம் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் சபரிகிரி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7.5 பவுன் நகைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் சபரிகிரியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்களிடம் நகைபறித்த காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீசார் நடத்திய விசாரணையில் செட்டிப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி தாலுகா ஆகிய பகுதிகளில் மேலும் இரண்டு நகைப்பறிப்பு வழக்குகளிலும் சபரிகிரிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தலைமைக் காவலர் சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil