பா.ஜ.க. பதவி ராஜினாமா : குமாரபாளையம் தொகுதியில் ஓம் சரவணா சுயேச்சையாக போட்டி

பாரதிய ஜனதா கட்சி மாவட்டம் செயலாளர் ஓம் சரவணா பதவியை ராஜினாமா செய்து விட்டு குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்

Update: 2021-03-18 07:38 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம்  தொகுதியை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ. கவுக்கு   ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், அதிமுக கூட்டணியில் அமைச்சர்  தங்கமணிக்கு மீண்டும்  குமாரபாளையம்  தொகுதி வழங்கப்பட்டது.  இதையடுத்து அதிருப்தி அடைந்த பாஜக தொண்டர்கள்,  மாவட்ட செயலாளர் ஓம் சரவணாவை சுயேச்சையாக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அவரை ஆதரித்து ஆதரவாளர்கள் தொகுதி முழுவதும் போஸ்டர்  ஓட்டி வந்தனர். பின்னர் மாவட்ட செயலாளர் ஓம் சரவணா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டு சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார். கடந்த சில நாட்களாக அவரது ஆதரவாளர்களுடன் தொகுதியில் பிரசாரம் செய்து வந்தார். 


இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் நகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து குமாரபாளையம் தாசில்தார்  அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மரகதவள்ளியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் தொழில்,வேலைவாய்ப்புகளை அதிகரிக்க சுயேச்சையாக  போட்டியிடுகிறேன்.

கடந்த மூன்று தினங்களில்  5ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் பிரசாரத்தை மேற்கொண்டேன். எனக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குமாரபாளையம் தொகுதியில் திமுக,அதிமுகவுக்கு  பதிலாக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். வெற்றி பெற்ற பிறகு குமாரபாளையம் என்ற பெயரை குபேரபாளையம் என்று பெயர் மாற்றம் செய்வேன்.  ஏன் என்றால் அந்த அளவிற்கு தொழில் வாய்ப்பு உள்ளது.

1000 பேரை புதிய தொழில் முனைவோராக உருவாக்குவேன். இதன் மூலம் குமாரபாளையம் குபேரபாளையமாக மாறும்.  இறுதி வரை தேர்தலில் இருந்து பின்வாங்க போவதில்லை.  இவ்வாறு ஓம் சரவணா  உறுதியுடன் தெரிவித்தார்.தொடர்ந்து குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட இருப்பதாக கூறினார்.

Tags:    

Similar News