விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவலங்கள் தீர்க்கப்படுமா?
Villupuram New Bus Stand-விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில ஆக்கிரமிப்பு மற்றும் அவலங்கள் போக்கப்படுமா என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Villupuram New Bus Stand-சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பேருந்து நிலையமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம், சபரிமலை,மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்த பேருந்து நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் திருவிழா கூட்டம்போல் பயணிகள் கூட்டம் அலைமோதும். இந்த பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். காரணம் பேருந்து நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகள், பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து கடையை விரித்தபடி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார்கள் சென்ற போதும், நகராட்சி அதிகாரிகள், பெயரளவுக்கு மட்டும் வந்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், அவர்கள் சென்ற சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றும் நகராட்சி அதிகாரிகள் மீண்டும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் உருவாகியுள்ளதா என்பதை கண்காணிப்பதில்லை.இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்பது வெறும் கண் துடைப்பாகவே இருந்து வருகிறது.ஆண்டு தோறும் இது மாதிரி புகார் எழும் போதெல்லாம் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிவிட்டு சென்ற மறுநாளில் இருந்தே மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகி விடுகிறது. இந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக பயணிகளுக்கும், கடை ஊழியர்களுக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. அதுபோல் கடைகளுக்கு வருபவர்கள், தங்கள் இருசக்கர வாகனங்களை கடைகளின் முன்பாக தாறுமாறாக நிறுத்துகின்றனர்.
இதுதவிர அவசர தேவைக்காக வெளியில் செல்பவர்கள் பலரும் மற்றும் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் வாகன கட்டணம் அதிகம் வாங்கப்படுகிறது. அதனால் கட்டணம் செலுத்தி இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் பேருந்து நிலைய கடைகள் முன்பாகவே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதுமாதிரி பயணிகளுக்கு இடையூறாக பேருந்து நிலைய கடைகள் முன்பு தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. போலீசார் எப்போதாவது வழக்குப்பதிவு செய்வது உண்டு. மற்ற நாட்களில் காவல்துறையினர் அதைப்பற்றி கண்டுகொள்வதே கிடையாது.
புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளாலும், கடைகள் முன்பாக தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களாலும் பயணிகள் நடந்து செல்வதற்குக்கூட முடியாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் பாரபட்சமின்றி அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி அதிகாரிகள் தினந்தோறும் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும், அதுபோல் பயணிகளுக்கு இடையூறாக தாறுமாறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களையும் ஒழுங்குப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளால் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று பேருந்து ஏற முடிவதில்லை. தவழ்ந்து செல்பவர்களும் மற்றும் ஊன்றுகோல் உதவியுடனும், சக்கர நாற்காலி மூலமும் செல்லக்கூடிய மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நடைபாதைகளில் சக்கர நாற்காலி மூலமாக செல்லக்கூடிய வழிப்பாதையையும் அடைத்தாற்போல் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் மீது சில சமயங்களில் கண் பார்வையற்றவர்கள் மோதி கீழே விழுந்து காயமடையும் சம்பவமும் நடந்து வருகிறது.
அதுமட்டுமின்றி நடைபாதை ஆக்கிரமிப்புகளால் அவ்வழியாக செல்ல முடியாமல் கடைகளை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. இங்கு மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ஆண்கள், பெண்களுக்கென்று தனித்தனியாக கட்டப்பட்டுள்ள கழிவறைகள் ஓராண்டுக்கும் மேலாக பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது.அதனை திறந்து மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர எந்த அதிகாரியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படிவிழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் ஆளாகி வருகிறது, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து புதிய பேருந்து நிலைய ஆக்ரமிப்புகளை அகற்றி, தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள், பொதுமக்கள் மத்தியில் கோரிக்கையாக எழுந்து வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2