மீண்டும் ரயில் பயணச் சலுகை கிடைக்குமா? மூத்த குடிமக்கள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயணச் சலுகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Update: 2022-11-17 14:51 GMT

பைல் படம்.

விழுப்புரம் ரயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரயில்வே வாரியம் பறித்துக்கொண்டது. இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது. பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும் என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை, ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கான கட்டண சலுகை, மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை இவையெல்லாம் கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று 40 வகையான சலுகைகளை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் நடைமேடைக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலை விரைவு ரயில் என்று பெயர் மாற்றம் செய்து இயக்குகிறார்கள். அந்த ரயில்களில் விரைவு ரயிலுக்கான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் விரைவு ரயிலுக்கான வேகம் இல்லை, பயணிகள் ரெயிலைப்போன்றே அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்கிறது. இது பயணிகள் மீதான கட்டண சுமையை அதிகரிக்கிறது. ரயில் பயணிக்கான சலுகைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற சலுகைகள் பறிப்பால் சுமையுள்ள பயணமாக மாறி வருவதால் பயணிகள், ரயில் பயணத்தை புறக்கணிக்கும் சூழல் ஏற்படுகிறது. தற்போது கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டதால் கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி நீக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால்தான் ஒட்டுமொத்த பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் ரயில்வே துறையில் 60 வயது முடிவடைந்த மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்டது. தற்போது, மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டனா. அதன்பின்னரும் சலுகைகள் நிறுத்தி இருப்பது நிச்சயம் முதியோர்களுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. ஏனெனில், வயதான காலத்தில் பலர் வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்கு கிடைத்த சலுகைகள் பேரு உதவியாக இருந்து வந்தது.

எனவே மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சை கொடி காட்டுமா? தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையே தாராள மனதுடன் பெண்களுக்கு இலவச பயண சலுகை, முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறது. ஆனால் லாபத்தில் இயங்கும் ரயில்வே துறை ஏற்கனவே வழங்கி வந்த சலுகையை பறித்து நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. எனவே ரயில்வே நிர்வாகம் சிவப்பு கொடி காட்டி நிறுத்திவைத்திருக்கும் கட்டணச் சலுகைக்கு விரைவில் பச்சை கொடி காட்ட வேண்டும் என்பதே மூத்த பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News