விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை ஆட்சியர் மோகன் வழங்கினார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்,453 கோரிக்கை மனுக்களை பெற்று, 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.62இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், 14 மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிவாய்ப்பு அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த முகாமை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும், மாவட்டந்தோறும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இங்கு நடைபெற்ற இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியம், இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, கை மிதிவண்டி, செயற்கை கை மற்றும் கால் உபகரணங்கள், காதொலிக்கருவி, ஊன்றுகோல், பார்வையற்றவர்களுக்கான கைப்பேசி, தொழில் தொடங்கிட கடனுதவி, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதுகு தண்டுவடம் பாதித்த 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.06 இலட்சம் மதிப்பீட்டில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியும், 1 மாற்றுத்திறாளிக்கு ரூ.9,050/- மதிப்பீட்டில் மூன்று சக்கர மிதிவண்டியும், 2 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்காக தலா ரூ.8,610/- மதிப்பிலான 2 உருப்பெருக்கிகள் ரூ.17,220 மதிப்பீட்டிலும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,058/மதிப்பீட்டியான 10 காதொலிக்கருவிகள் ரூ.30.580 மதிப்பீட்டிலும், என மொத்தம் 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.52 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம், மகாத்மா காந்தி தேசிய மரசு வேலை உறுதி திட்டத்தின்கீழ் 14 நபர்களுக்கு வேலைக்கான அடையாள அட்டை வழங்கினார்.
மேலும், ஓராண்டு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக மாற்றுத்திறமாரிகளுக்கான மூன்று சக்கர மிதிவண்டி சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், கை, கால் இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பிரெய்லி கை கடிகாரம், மடக்கு ஊன்றுகோல் மற்றும் கருப்பு கண்ணாடி, நவீன செயற்கை கால், மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை, நவீன காதொலி கருவி மற்றும் இலவச வீட்டு மனை பட்டா ஆகிய நலதிட்ட உதவிகள் சுமார் 7253 பாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 15 கோடியே,16 லட்சத்து,27ஆயிரத்து,029 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுக்கிறனாளிகள் சமூகத்தில், சம நிலைகளில் இருப்பதற்கு அரசின் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, இதனை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வினை வளப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மோகன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட பலர் உடனிருந்தனர்.