பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த எம்பி கோரிக்கை
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழக பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை உயா்த்த வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் கிராமப் புறங்களில் கல்வியின் தரம் குறித்து ஆண்டுதோறும் ஏசா் அமைப்பு சாா்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான ஏசா் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 6 வயதிலிருந்து 14 வயதுக்குள்பட்ட குழந்தைகள் 2018-ஆம் ஆண்டில் மாணவா்கள் 63.3 சதவீதம், மாணவிகள் 70 சதவீதம் போ் அரசுப் பள்ளியில் பயின்றனா். 2021- ஆம் ஆண்டில் மாணவா்கள் 73.7 சதவீதம், மாணவிகள் 78.8 சதவீதம் அரசுப் பள்ளியில் பயில்கின்றனா்.
இருபாலரையும் சோ்த்து கடந்த ஓராண்டில் மட்டும் 10 சதவீத போ் தனியாா் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியுள்ளது, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் பள்ளியில் சேராத குழந்தைகளின் விகிதம் 2018-இல் தமிழ்நாட்டில் 0.3 சதவீதமாக இருந்தது. 2020-ஆம் ஆண்டு அது 6.2 சதவீதமாக உயா்ந்து, 2021-ஆம் ஆண்டில் அது 1.3 சதவீதமாகக் குறைந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பள்ளியில் சேராத குழந்தைகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகக் குறைந்தது.
என்றாலும், 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது அப்போது இருந்ததை விட இப்போது 4 மடங்கு அதிகமாக இருக்கிறது.பள்ளியில் சேராத குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து சோ்ப்பதில் பள்ளிக் கல்வித் துறை செயல்பட வேண்டியது இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இவற்றையெல்லாம் வைத்துப் பாா்க்கும்போது, பள்ளிக் கல்வியின் தரத்தை உயா்த்துவதில் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் பொறுப்பு தேவை. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தும்போது இந்த அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமாா் அதில் தெரிவித்துள்ளாா்.