விழுப்புரம் மாவட்ட குற்ற செய்திகள்: புதுச்சேரி ரவுடி கைது
புதுச்சேரி மாநிலம் சின்ன காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் சின்னக்காலாப்பட்டு திடீர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் மகன் கவுதமன் (வயது 27). ரவுடியான இவர் மீது விழுப்புரம் மாவட்டம் வளத்தி பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த செப்டம்பர் 13 அன்று மேல்மலையனூர்- வளத்தி சாலையில் பெட்ரோல் நிலையம் அருகில் மேல்மலையனூரை சேர்ந்த ராஜாராம் (40) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் கவுதமனை வளத்தி போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். அதன்பேரில் கவுதமனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து கவுதமனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
சாராயம் கடத்திய இருவர் கைது
விழுப்புரம் அருகே ஆழாங்கால் பகுதியில் வளவனூர் காவல் ஆய்வாளர் ரத்தினசபாபதி, உதவி ஆய்வாளர் அன்பழகன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 ஸ்கூட்டர்களில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் வழிமறித்து சோதனை செய்ததில் அவர்கள் வந்த ஸ்கூட்டர்களில் 20 லிட்டர் கொண்ட 5 பாக்கெட்டுகளில் 100 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர்கள் இருவரும் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை அடுத்த ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 30), மதகடிப்பட்டு மேட்டுத்தெருவை சேர்ந்த சிவானந்தன் (36) என்பதும், இருவரும் புதுச்சேரியில் இருந்து சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பாலச்சந்திரன், சிவானந்தன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சாராய பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 ஸ்கூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
திண்டிவனம் அருகே போலி டாக்டர் கைது
திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை நயினார் தெருவில் ஒருவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மேற்பார்வையில், வெள்ளிமேடுபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் இந்துமதி, வெள்ளிமேடுபேட்டை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நயினார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கீழ்மாவிலங்கை தேரடி தெருவை சேர்ந்த குணபூஷ்ணன் (வயது 61) என்பவர் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.