விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் துர்நாற்றம் வீசும் அவலம்

விழுப்புரம் நகராட்சி பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பழைய பேருந்து நிலையம் துர்நாற்றம் வீசும் நிலையமாக மாறி வருகிறது.

Update: 2022-11-06 08:14 GMT

துர்நாற்றம் வீசும் பழைய பேருந்து நிலையம்.

நகரத்தின் விழுப்புரம்- புதுச்சேரி மார்க்கத்தில் பழைய பேருந்து நிலையம் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. இன்னமும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்து, விழுப்புரம் மாவட்டமாக பிரிக்கப்பட்டது. அதனால் விழுப்புரம் மாவட்ட தலைநகராக தரம் உயர்த்தப்பட்டது.

அதனடிப்படையில் நகரத்தின் அருகில் வழுதரெட்டி பகுதியில் அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2000 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதனால் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது, அதனால் இந்த பழைய பேருந்து நிலையத்திற்கு நகர பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலைக்கு பழைய பேருந்து தள்ளப்பட்டது.

குறிப்பாக பில்லூர், தளவானூர், பிடாகம், பெரும்பாக்கம், காணை, கோலியனூர், வளவனூர், அனந்தபுரம், அரசூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு டவுன் பேருந்துகள் மட்டும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்த பேருந்து நிலையத்தில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு பழைய பேருந்து நிலையத்தை நகராட்சி கண்டு கொள்ளாமல், அப்பகுதியை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

இந்த பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பயணிகள் தான் பெரும்பாலும் பயணம் செய்து வருகின்றனர். அதனால் தானோ என்னவோ பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் நகராட்சி செய்து தரப்படவில்லை. இங்கிருந்த பழைய கட்டிடங்களையெல்லாம் இடித்து அப்புறப்படுத்திவிட்டு வணிக வளாகத்திற்கான கடைகளை கட்டியுள்ளனரே தவிர பயணிகளுக்கு தேவையான எந்தவொரு அடிப்படை வசதியும் செய்யவில்லை. அதனால் துர்நாற்றத்தின் பிடியில் பேருந்து நிலையம் சிக்கி கிடக்கிறது.

பயணிகளின் தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் வெகுநேரம் பேருந்துதிற்காக காத்திருக்கும் பயணிகள் குடிக்க குடிதண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இங்கு கட்டண கழிவறை இருந்தபோதிலும் இலவச கழிவறை, சிறுநீர் கழிக்கும் இடம் இல்லாததால் பயணிகள், அவசரத்திற்கு பேருந்து நிலையத்திலேயே சாலையோர வாய்க்காலில் சிறுநீர் கழித்து வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

குப்பையில் உரம் தயாரிப்பு என கூறிக்கொண்டு நகரின் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்களில் சேரும் குப்பைகளை மூட்டைகளாக கட்டிக்கொண்டு பேருந்து நிலையத்திற்குள் கொண்டுவந்து போடுகின்றனர். நகரில் குப்பைகளை கொட்டுவதற்கு வேறு எங்குமே இடமில்லாதவாறு பேருந்து நிலையத்திற்குள் கொண்டு வந்து குவியல், குவியலாக போடுகின்றனர். இங்கு நாள்தோறும் 2 லாரிகள் நிறைய குப்பை மூட்டைகளை அள்ளிச்செல்லும் அளவிற்கு குப்பைகள் மூட்டை, மூட்டைகளாக மலைபோல் குவிந்துக்கிடக்கிறது. இவ்வாறு கொண்டு வந்து போடப்படும் குப்பைகள், அங்குள்ள கழிவுநீர் வாய்க்கால் அருகிலேயே போட்டுவிட்டு செல்வதால் கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. அதிலிருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன

அதோடு தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் பேருந்து நிலைய பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் மூக்கை பிடித்துக்கொண்டு பேருந்து நிலையத்தில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. ஒருபுறம் திறந்தவெளியிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். மற்றொரு புறம் கழிவுநீர் வாய்க்கால் அருகில் குப்பைகள் மலைபோல் மூட்டை, மூட்டைகளாக குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடாக காட்சியளிப்பதோடு துர்நாற்றத்தின் பிடியிலும் பேருந்து நிலையம் சிக்கி கிடக்கிறது, இங்கு வரும் பயணிகள் மட்டுமின்றி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் நிற்பதற்கு தகுந்தாற்போல் பெரியளவில் நிழற்குடை இருந்தது. பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றும்போது அந்த பயணியர் நிழற்குடை கட்டிடத்தையும் இடித்து அப்புறப்படுத்திவிட்டனர். அதற்கு பதிலாக அங்கு பெயரளவில் சிறிய அளவிலான நிழற்குடை கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வெறும் 50 பயணிகள் மட்டுமே நிற்கும் அளவிற்கு இடமுள்ளது. போதிய இருக்கை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் ஒதுங்கி நிற்பதற்குக்கூட இடமில்லாமல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பேருந்து ஏறிச்செல்ல வேண்டியுள்ளது.

மணிக்கணக்கில் இயக்கப்படும் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கு போதுமான நிழற்குடை வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித்தர வேண்டும். பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் தினம், தினம் அவதிபட்டு வருகின்றனர்.

எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட துறையை முடுக்கி குடிநீர், கழிவறை வசதி, உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, சென்னை போன்ற பெருநகரங்களைப்போல் மேற்கூரை வசதிகளுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைத்து அதன் வழியாக அந்தந்த மார்க்கங்களுக்கு செல்லும் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகம் உரிய வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News