சிறுவன் மரணத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை திணறல்

விழுப்புரம் நகரத்தில் சாலையோரம் பிணமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் போலீசார் திணறி வருகின்றனர்.

Update: 2021-12-23 13:49 GMT

விழுப்புரத்தில் பசியால் சிறுவன் இறந்தது தொடர்பாக சிறுவனை இருவர் தூக்கி வருவதாக போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி கோமிரா பதிவு

விழுப்புரத்தில் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விழுப்புரம் சிபிஎம் மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ள விழுப்புரம் வந்திருந்த மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் குழந்தை பட்டினியால் சாவு வருத்தம் அளிப்பதாகவும், உண்மையை கண்டறிய வேண்டும் என்றார், இதனையடுத்து அந்த சிறுவனின் மரண வழக்கு தற்போது வேகமெடுத்து செல்கிறது,

இந்நிலையில் விழுப்புரத்தில் தள்ளுவண்டியில் பிணமாக கிடந்த சிறுவனை தூக்கி வந்த 2 பேர் சி.சி.டி.வி. பதிவில் சிக்கியுள்ளனர். அவர்கள் யார் என அடையாளம் காண தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்

விழுப்புரம் மேல்தெரு பகுதியில் கடந்த 15-ந்தேதியன்று துணிகளை இஸ்திரி செய்ய பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவனது உடலை போலீசார் கைைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,

அதன் முடிவில் சிறுவனின் உணவுக்குழாயில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாததால் அவன் உணவின்றி பட்டினியால் இறந்திருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் குறித்து விசாரித்து வருகிறனர்.

இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், சிறுவன் எந்த ஊரை சேர்ந்தவன்?. பெற்றோர் யார்? அவனை இங்கு கொண்டு வந்து போட்டு சென்றது யார்? என்று பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதனை பார்வையிட்டனர். அப்போது, விழுப்புரம் புதிய பஸ் நிலையம், திருச்சி நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் இருக்கும் கேமராக்களில், கடந்த 14-ந் தேதியன்று நள்ளிரவு புதிய பஸ் நிலையத்தில் இருந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த சிறுவனின் மீது துணியால் மூடியபடி சிறுவனை தனது தோளில் சுமந்தபடி நடந்து செல்வதும், அந்த நபருடன் சுமார் 55 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் உடன் செல்வதும் பதிவாகியுள்ளது.

மேல்தெரு பகுதி சென்றதும் அங்குள்ள தள்ளுவண்டியில் துண்டை விரித்து அதன் மீது அந்த சிறுவனை படுக்க வைத்துவிட்டு பின்னர் மீண்டும் அவர்கள் இருவரும் அங்கிருந்து நடந்தே புதிய பஸ் நிலையம் வந்து பஸ் ஏறிச்சென்றதும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது.

இவர்கள் அன்று நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள் சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுவிட்டு பஸ் ஏறிச்சென்றிருப்பதாக சி.சி.டி.வி. காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் அவர்களது முகம், சி.சி.டி.வி. காட்சியில் தெளிவாக பதியவில்லை.

இதனால் அவர்களை எளிதில் அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் சட்டை காலரில் தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஸ்டிக்கர் இருப்பதால் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் சிறுவனின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை அனுப்பி இதுபற்றி தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் இதுபற்றி விவரங்கள் அனுப்பப்பட்டு ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக மாவட்ட காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது, சிறுவன் மரணத்தில் போலீசார் திணறி வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News