மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்.. பேச்சுவார்த்தையில் உடன்பாடு...

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-13 14:46 GMT

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டத்தி்ல ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட செவலபுரையில் அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த குடியிருப்பை நீதிமன்ற உத்தரவை காட்டி இடிக்கப்பட்டது. ஆறு மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் மாற்று இடம் வழங்குவோம் என்று அளித்த உறுதிமொழி உத்தரவு படி மாற்று இடம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக மாற்று இடம் வழங்காமல் அலட்சியமாக உள்ள அரசு அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதி மொழி படி மாற்று இடம் பெறாமல் செல்லுவதில்லை என்ற உறுதியுடன் பாதிக்கப்பட்ட மக்கள் குடும்பத்துடன் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இன்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருக்கும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார், கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:

நீதிமன்ற உத்தரவை மதித்து, இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்குவீர்கள் என காத்திருந்தோம் ஆனால் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக பள்ளி உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் தங்கி இருந்து வருகின்றனர். இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள அரசு கட்டிடங்களை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் அச்சுறுத்தி வருகின்றனர் இது எந்த வகையில் நியாயம். எனவே, உடனடியாக பேச்சுவார்த்தை உறுதிமொழி படி மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மூத்த உறுப்பினர் உதயகுமார், வட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடபதி, ஹரிஹரகுமார், குமார், கார்த்திகேயன், சுப்பிரமணியன், அண்ணாமலை, கிளை செயலாளர் துரைசாமி உட்பட்ட சிபிஎம் கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் மேலச்சேரி கிராமத்தில் 10 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க அதிகாரிகள் உடன்பாட்டில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News