மேல்மலையனூரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம்…
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடிக்குப்பம், பெருவளூர், நெச்சளூர் ஆகிய ஊராட்சிகளில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க வட்ட அமைப்பாளர் குமார் தலைமை வகித்தார். இதையெடுத்து, மேல்மலையனூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வளத்தி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகளின் பாதுகாப்பு நல சங்கத்தினர் சார்பில் மாநில துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் முத்துவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் முருகன், வட்ட குழு ஏழுமலை, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, 100 நாள் வேலை தொடர்ந்து வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக எழுதி அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகளின் பாதுகாப்பு நலச் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் அரசின் திட்டங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விருப்பம் இல்லாமல் செயல்படும் சூழ்நிலை விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலையை வழங்க வேண்டிய பெரும்பாலான ஊராட்சிகள் அதனை மெத்தனப் போக்கில், மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் நோக்கத்தோடு பணி வழங்குவது இல்லை.
தற்போது, காத்திருப்பு போராட்டத்திற்கு பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழித்துக் கொண்டது போல் விரைந்து வந்து அழைத்துப் பேசி 100 நாள் வேலை வழங்குவதாக உறுதியளிக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டக்கூடாது என தெரிவித்தனர்.