விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டுகள், சீருடைகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.;
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, நகராட்சி தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 1,806 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவ்வாறு வகுப்புகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. விலையில்லா நோட்டுகளும், சீருடைகளும் வழங்கப்படாமல் இருந்தது.
அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வரவழைக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 1,670 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் 2 லட்சத்து 3 ஆயிரத்து 780 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா நோட்டுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து தற்போது அந்தந்த கல்வி மாவட்டங்களில் இருந்து அந்தந்த பள்ளிகள் வாரியாக நோட்டுகள் பிரித்து அவற்றை வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றுடன் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள 1,58,755 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா சீருடைகளும் அனுப்பப்பட்டு வருகிறது.
இதனை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேரடியாக கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விலையில்லா நோட்டுகள் மற்றும் சீருடைகளை பெற்று அவற்றை வாகனங்களில் பள்ளிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக இறக்கி வைத்து அதனை மாணவ- மாணவிகளுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.