விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு
வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவுறுத்தினார்;
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசுகையில் மத்திய, மாநில அரசுகள் பொது மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஒன்றியக்குழு தலைவர்கள் தங்கள் பகுதிகளில் நிறைவேற்ற கூடிய திட்டங்கள் குறித்து ஒன்றிய அளவில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வளர்ச்சி திட்டபணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மெத்தனப்போக்குடன் செயல்படாமல் பணிகளை உரிய காலத்துக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் செஞ்சிமஸ்தான் தெரிவித்தார்.
கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு குறைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும். அரசு திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். இதற்கு அலுவலர்கள் உரிய முறையில் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிர வாண்டி புகழேந்தி, மயிலம் சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுதலைவர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் ஒன்றியக்குழுதலைவர்கள் கலைச்செல்வி சச்சிதானந்தம், வாசன் மற்றும் அனைத்துத் துறை, உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.