அடிப்படை வசதிகள் இல்லாத அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்.. காங்கிரஸ் புகார்...
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு தலைவரும், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியின் முன்னாள் தலைவருமான வாசிம்ராஜா விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு விவரம் வருமாறு:
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.1 கோடி முதல் அதிகபட்சம் ரூ. 2 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெறுகிறது. ஆனால் இங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வசதிக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
தேவைக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை மேலும் கட்டமைக்க வேண்டும். மின் விளக்கு, கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை சரி செய்ய வேண்டும். குறிப்பாக விற்பனைகூட வளாகத்தின் உள்ளே இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள் அப்படியே கிடக்கின்றன. இதனால் அருகே உள்ள கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதோடு, அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையீட்டு ஒருங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் பழைய கட்டிட இடிபாடுகளை உடனே அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனுவில் வாசம்ராஜா தெரிவித்துள்ளார்.