விழுப்புரம்: வாக்காளர்கள் ஆதார் இணைக்க சிபிஎம் எதிர்ப்பு

CPM Political Party - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வாக்காளர்கள் ஆதார் எண் இணைக்க சிபிஎம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.;

Update: 2022-08-18 01:45 GMT

மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்ற கூட்டம்.

CPM Political Party -விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆதார் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் பேசுகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் மற்றும் வாக்காளர் பட்டியலில் புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் பதிவு செய்வதற்கான தகுதி நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 01.08.2022 முதல் 31.03.2023 வரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெறுகிறது. இக்காலக்கட்டத்தில் வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்திட வேண்டும்.

இதன் நோக்கம், வாக்காளர் பட்டியலினை நூறு சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம்பெறுதல் போன்றவற்றை தவிர்த்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணை இணையதளம் வாயிலாகவும் மற்றும் வாக்காளர் உதவி செயலி வாயிலாகவும் பதிவேற்றம் செய்திடலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும், 04.09.2022 முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களில் இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்த்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஜனவரி 01-ஐ தகுதி நாளாக கொண்டு பூர்த்தியானவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வந்த நிலையினை மாற்றி ஜனவரி - 01, ஏப்ரல் - 01, ஜீலை -01 மற்றும் அக்டோபர் - 01 ஆகிய நான்கு தேதிகளையும் அடிப்படையாக கொண்டு வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பட்டியலில் சேர்த்திடும் வகையில் தற்பொழுது உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேற்படி காலாண்டுகளுக்குள் 18 வயது நிறைவு செய்யும் புதிய மற்றும் இளம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துகொள்ள முடியும். எனவே, மேற்காணும் நாட்களில் தகுதி கொண்டவர்கள் வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்ந்திட வேண்டும். மேலும், 01.01.2023 நாளை அடிப்படையாக கொண்டு சிறப்பு சுருக்கத்திருத்தப்பணி துவங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் மற்றும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்திடும் வகையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்தார்.

அப்போது விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் பேசுகையில், ஊட்டச்சத்து துறையில் 6 மாத குழந்தைகள் முதல் 6 வயது வரை ஆதார் எண் இணைக்கபட்டதால் 21/2 கோடி மேல் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். எந்த திட்டங்களிலும் ஆதார் எண் இணைக்க கூடாது என்பது சிபிஎம் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. அந்த வகையில் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைக்க கூடாது, அதனால் ஏழை எளிய வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு பாதிக்கப்படும் வகையில் மாறும், இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால் வாக்காளர்கள் ஆதார் எண்ணை இணைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் ஆட்சியர் அமித், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சார் ரவிச்சந்திரன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) செந்தில் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News