விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண் திருஷ்டி பூஜையால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் திடீரென பூசணிக்காய் உடைத்து பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்க மக்கள் நூற்றுக்கானோர் வந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அலுவலக நுழைவு வாயிலில் பச்சை நிறை உடை அணிந்து சாமியார் போல தோற்றமளித்த மர்ம நபர் ஒருவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவர் பையில் மறைத்து வைத்திருந்த பூசணிக்காயை வைத்து அதன் மேல் மஞ்சள் பொடியை கொட்டி வெற்றிலைப்பாக்கு வைத்தார். ஏதோ விபரீதம் நிகழப்போவதை உணர்ந்து அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் ஓடி சென்று அந்த மர்ம நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் விக்கிரவாண்டி அருகே உள்ள அரசலாபுரத்தைச் சேர்ந்த சுப்புராயலு மகன் ரகுராமன் என்பது தெரியவந்தது. அவர் ஆட்சியரிடம் கொடுக்க வைத்திருந்த கோரிக்கை மனுவில், எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். மேலும் கள்ளச்சாராயம், தடை செய்யப்பட்ட புகையிலையை விற்கின்றனர். இவர்கள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு பினாமியாக உள்ளதால் இவர்கள்மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இது தொடர்பாக அரசுக்கு நான் புகார் அளித்ததால் என்னை தாக்கியதோடு, என் குடும்பத்தாரையும் தாக்க திட்டம் தீட்டியுள்ளனர்.
எனவே என்னையும், என் குடும்பத்தாரையும் காப்பாற்றவேண்டும் என கேட்டுக்கொள்வதாக அதில் தெரிவித்து இருந்தார் பின்னர் ரகுராமனிடம் பூசணிக்காய் வைத்து என்ன செய்ய இருந்தீர்கள் என கேட்டபோது, பூசணிக்காயை உடைத்தால், ஒரு மனிதனை பலி கொடுப்பதற்கு ஈடாகும். அதனால் பூசணிக்காயை இங்கு உடைக்க கொண்டுவந்தேன். ஆனால் அதற்குள் போலீசார் என்னை அப்புறப்படுத்திவிட்டாா்கள் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.