விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-03-06 14:20 GMT

தீக்குளிக்க முயன்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கட்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட தென்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்துள்ளார். அப்பொழுது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலை முயற்சிக்கு ஈடுபட முயன்றார்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இதைப் பார்த்து தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் தங்கள் கிராமத்தில் தனது பெயரில் கிரயம் செய்த பட்டாவை அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தன்னிடம் தகராறில் ஈடுபட்டு வருகிறார், அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு மீண்டும் எனது இடத்தை பெற்று தரவேண்டும் என தெரிவித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து அழைத்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்து, பின்னர் வீட்டுக்கு அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வருபவர்கள் இதுபோல் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் பரவலாக நடப்பதால் அதனை தடுக்க போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் போலீசார் சோதனையையும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகிறது.

Tags:    

Similar News