விழுப்புரம்: நீச்சல் குளத்தை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்
விழுப்புரத்தில் ரூ.29 லட்சம் மதிப்பில் நடந்து வரும் நீச்சல் குள சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டதால் சில ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்து வந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சி பெறுபவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நீச்சல் குளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீச்சல் குள பராமரிப்பு பணிகளை தரமான முறையில் விரைந்து மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
அப்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதியிடம், பணிகளின் தரம், முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நீச்சல் குள பராமரிப்பு பணிகள் அனைத்தும் தரமாக நடக்க வேண்டும். நீச்சல் குளம் என்பது பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. எனவே பணிகளில் ஏதேனும் சிறு குறைபாடுகள் இருந்தாலும் அதற்கு முழுக்க, முழுக்க நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஏதாவது குறைகள் இருந்தால் 20 சதவீத வட்டியுடன் சேர்த்து நீங்கள்தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக எனக்கு 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டுத்தர வேண்டும் என்றார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி, பணிகள் தரமான முறையில் நடைபெறும் என்று உறுதியளித்தார்.
மாவட்ட ஆட்சியர் மோகன், நிருபர்களிடம் கூறுகையில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் ரூ.29.09 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகள் நீச்சல் பழகும் நீச்சல் குளத்தில் சேதமடைந்த தரைத்தளத்தை மாற்றி குழந்தைகளின் மனம் கவரும் வகையிலான இத்தாலியன் டைல்ஸ் பதித்திடவும், பெரியவர்கள் நீச்சல் பழகும் நீச்சல் குளத்தில் சேதமடைந்த தரைத்தளத்தை மாற்ற புதிய டைல்ஸ் பதித்திடவும் நீச்சல் குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேவர் பிளாக் கல் பதித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பூங்கா அமைத்து பராமரிக்கப்பட உள்ளது. மேலும் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நடைபயிற்சி பூங்காவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.2½ கோடி மதிப்பில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் நிலையில் உள்ளது என அவர் கூறினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, உதவி செயற்பொறியாளர் விஜயா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.