விழுப்புரம் அருகே மேம்பால அமைக்க கிராம மக்கள் கோரிக்கை
விழுப்புரம் அருகே மலர் ஆற்றில் உள்ள தரை போல மூழ்குவதால் போக்குவரத்து பாதிப்பு மேம்பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
விழுப்புரம் அருகே மழைக்காலத்தில் மலட்டாற்றை கடக்க விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பையாறு, நரியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பக்கத்து மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக விழுப்புரம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருக்கும் தரைப்பாலங்களை வெள்ளநீர் மூழ்கடித்தவாறு செல்வதால் கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காக நகர்ப்புற பகுதிக்கு வர முடியாமலும், மாணவ- மாணவிகள் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே எஸ்.மேட்டுப்பாளையத்தில் இருந்து பரசுரெட்டிப்பாளையத்துக்கு இடையே செல்லும் வழியில் தரைப்பாலம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களின்போது இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து தடைபடுகிறது.
இதன் காரணமாக மேற்கண்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும் மற்றும் வேலைக்கு செல்லவும் வெகுதூரம் சுற்றிக்கொண்டு பண்ருட்டி செல்கின்றனர். ஒரு சிலர் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் வழியாக இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். இக்கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ராம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். மழைக்காலத்தில் இந்த தரைப்பாலம் மூழ்கினால் அவர்கள் ராசம்பேட்டை வழியாக சுமார் 4 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பள்ளிக்கு சென்றுவரும் நிலைமை ஏற்படுகிறது. சைக்கிள் இல்லாத மாணவர்கள் கால்கடுக்க நடந்தே அங்குள்ள வயல்வெளி பகுதி வழியாக பள்ளிக்கு செல்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் குறித்த நேரத்திற்குள் பள்ளி செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
அதுபோல் பரசுரெட்டிப்பாளையத்தை சுற்றிலும் 100 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், ஏர் உழுதல் போன்ற பணிகளில் ஈடுபட நிலங்களுக்கு செல்ல வேண்டுமெனில் தரைப்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் மழைக்காலத்தில் இந்த தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் ராசம்பேட்டை வழியாக சுற்றிக்கொண்டுதான் நிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே மலட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது இங்குள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். இதனை ஏற்ற தமிழக அரசு, மேம்பாலம் அமைப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரையிலும் அதற்கான நிதி ஒதுக்கப்படாததால் மேம்பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே விரைவில் மேம்பால பணிகளை தொடங்கி எந்தவித தொய்வின்றி பணியை மேற்கொண்டு பாலத்தை தரமான முறையில் கட்டி முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.