விக்கிரவாண்டி அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் 8 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான நிர்வாகி உள்பட 8 பேரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, ஆசிரமத்தில் இருந்த சிலர் மாயமானது போன்ற அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளியானது.
இந்த புகார்களின் அடிப்படையில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் சதீஷ், அய்யப்பன், கோபிநாத், பூபாலன், முத்துமாரி, தாஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் வயது முதிர்வின் காரணமாக தாஸ் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, மரியா ஜூபின் உள்ளிட்ட 8 பேரும் ஜாமீன் கேட்டு வக்கீல் ரஸ்கின்ஜோசப் மூலம் விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் சனிக்கிழமை நீதிபதி (பொறுப்பு) சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புஜோதி ஆசிரம வழக்கு விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பு வக்கீல் சங்கீதா கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து ஜூபின்பேபி உள்ளிட்ட 8 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர், ஏன் என்றால் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மட்டும் இன்றி நாடு முழுவதும் கடும் அதிரவலையை இந்த வழக்கு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.