ஏல சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் எஸ்.பி.யிடம் புகார்

விழுப்புரத்தில் ஏல சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் குறித்து எஸ். பி. அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது.;

Update: 2022-08-09 12:58 GMT

ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு  கொடுக்க வந்தனர்.

புதுச்சேரி, பி.எஸ்.பாளையம், மதகடிப்பட்டு, பள்ளிநேலியனூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அந்நிறுவனம் 6 மாதம், ஒரு வருடம் என்ற 2 திட்டங்களின் கீழ் ஏலச்சீட்டு நடத்தி வந்தது. அதில் நாங்கள் பலர், உறுப்பினராக சேர்ந்து ஏலச்சீட்டு செலுத்தி வந்தோம். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை ஏலச்சீட்டு கட்டினோம். அந்நிறுவனத்தின் ஊழியர்களே எங்களிடம் நேரடியாக வந்து பணம் வசூலித்து சென்றனர்.

கடந்த 2 மாதமாக அந்நிறுவன ஊழியர்கள் யாரும் எங்களிடம் பணம் வசூலிக்க வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நாங்கள், அந்நிறுவன மேலாளரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே நாங்கள் அந்நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பார்த்தபோது அந்நிறுவனத்தை காலிசெய்து விட்டு சென்றிருந்தை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். எங்களைப்போன்று 500-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து ஏலச்சீட்டு பணம் பெற்று பல கோடி வரை அந்நிறுவனத்தினர் மோசடி செய்து விட்டனர்.

எனவே சம்பந்தப்பட்ட அந்நிறுவனத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

Similar News