திண்டிவனம் அருகே கர்ப்பிணி இறப்பிற்கு இழப்பீடு கேட்டு வி.சி.க. மறியல்

திண்டிவனம் அருகே பிரசவத்தின் போது தாய் குழந்தை இறப்பில் இழப்பீடு கேட்டு வி.சி.க. சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-16 14:31 GMT

திண்டிவனம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள ஏந்தூர் புதிய காலனியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(வயது 29). தச்சு தொழிலாளி. இவரது மனைவி சந்தியா(25). இவர்களுக்கு பிரகியா(5), சிவமணி(3) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 3-வதாக கர்ப்பமான சந்தியாவுக்கு, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

தொடர்ந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த சந்தியா மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர்  புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இந்த நிலையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் சந்தியாவின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பிரம்மதேசம் அருகே ஏந்தூர் கூட்ரோட்டில் சாலைமறியல் செய்தனர். தவறான சிகிச்சை அளித்ததால் தான் சந்தியா இறந்துள்ளார். எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில்  நேற்று 2-வது நாளாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் திண்டிவனம் தொகுதி செயலாளர் பூபால் மற்றும் உறவினர்கள், குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, தாசில்தார் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அவர்கள் சந்தியாவின் உடலை அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டு, போராட்டத்தை விலக்கி கொண்டனர். 

ஆனாலும்  விழுப்புரம் அருகே பிரசவத்தினால் தாய் குழந்தை இறந்த சம்பவம் அங்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திண்டிவனம் சார் ஆட்சியர் இந்த பிரச்சினையில் தலையிட்டு அவரின் தீவிர முயற்சியால் சுமூகமான நிலையை எட்டிய நிலையில் அப்பகுதியில் சோகம் மட்டும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. மேலும் இறந்த கர்ப்பிணிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் அரசு இந்த இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் கருதி  தமிழக அரசு ஏதாவது நிவாரண உதவியை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் மூலம் அக்குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைக்கும் என்ற கோரிக்கையையும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகிறார்கள்.

Tags:    

Similar News