கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஆயுதம் தடுப்பூசி
கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் ஆயுதம் தடுப்பூசி என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்;
கொரோனா உயிரிழப்பை தடுக்கும் ஆயுதம் தடுப்பூசிதான் என்றார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன்.
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் என்று விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் மோகன் அறிவுரை கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஆட்சியர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆட்சியர் மோகன் பேசுகையில், கொரோனா தடுப்பூசி முகாம் விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கவுள்ளது, 33-வது கொரோனா தடுப்பூசி முகாம் 2,033 இடங்களில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் கடந்த மருத்துவமனை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் கண்டிப்பாக ஊக்குவிப்பு தவணை (பூஸ்டர் டோஸ்) செலுத்திக் கொள்ள வேண்டும். 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை பூஸ்டர் டோஸ் தேவைப்படுவோர் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு பயன்பெறலாம். மேலும் 45 வயதிற்கு மேற்பட்டோரில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்க்கு உள்ளானவர்கள். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது உள்ளோரில் முதல் தவணை 57,809 பேருக்கும், 2-ம் தவணை 48,464 பேருக்கும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளோரில் முதல் தவணை 82,253 பேருக்கும், 2-ம் தவணை 69,626 பேருக்கும், 18 வயதிற்கு மேற்பட்டோரில் முதல் தவணை 16,75,663 பேருக்கும், 2-ம் தவணை 17,91,347 பேருக்கும், பூஸ்டர் டோஸ் 53,824 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது தீவிர நோய்த்தொற்று மற்றும் இறப்பிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுவதோடு பிறருக்கு நோய் தொற்று பரவும் தன்மையை குறைக்க உதவும். நம்மை சுற்றியுள்ளவர்களையும், எளிதில் நோய்த்தொற்று ஏற்படக் கூடியவர்களையும் பாதுகாக்க உதவும். கொரோனா உயிரிழப்பை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசிதான். எனவே முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்றார் அவர்.