வேலை இல்லா என்ஜினீயரிடம் இணையதளம் மூலம் பணம் மோசடி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆன்லைன் மூலம் என்ஜினீயரிடம் பணம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.2¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கயத்தூரை சேர்ந்தவர் ஜெய்தீப் (வயது 29). இவர் பி.இ. கணினி அறிவியல் படித்து முடித்துவிட்டு தற்போது வேலையின்றி வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 22-ந் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜெய்தீப்பின் செல்போனுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஒரு குறுந்தகவல் அனுப்பினார். அதில் தினமும் வேலை, ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை ஊதியம் என்று குறிப்பிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து சில மணி நேரம் கழித்து டெலிகிராம் மூலம் ஜெய்தீப்பை தொடர்புகொண்ட நபர், சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஒரு லிங்கை அனுப்பி வைத்தார். உடனே ஜெய்தீப், அந்த லிங்கிற்குள் சென்று தனது விவரங்களையும் மற்றும் தனக்கென யூசர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றை பதிவு செய்து அந்த நபர் கூறியபடி ரூ.2 ஆயிரத்தை முதலீடு செய்து ரூ.2,800-ஐ திரும்ப பெற்றார்.
அந்த ஆசையில் கடந்த 24, 25-ந் தேதிகளில் ஜெய்தீப், அந்த நபர் கூறிய வங்கிகளின் கணக்குகளுக்கு போன்பே, கூகுள்பே மூலம் 7 தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 560-ஐ அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற மர்ம நபர், ஜெய்தீப்புக்கு சேர வேண்டிய தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயதீப் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பூங்கோதை, உதவி ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
காவல்துறை ஆன்லைன் ஏமாற்று குறித்து எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் வேலையில்லா திண்டாட்டத்தின் காரணமாக படித்தவர்களே பணம் அதிகமாக கிடைக்கும் என்ற ஆசையில் ஏமாந்து வருவது வாடிக்கையாகி வருகிறார்கள். எனவே தற்போது அதனை தடுக்கும் நடவடிக்கையை காவல்துறை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.