விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடியில் ஊழியர் கொலை: இருவர் கைது

விழுப்புரத்தில பல்பொருள் அங்காடிக்குள் ஊழியரை கத்தியால் குத்திக்கொலை செய்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.;

Update: 2023-03-30 12:13 GMT

விழுப்புரம் காந்தி வீதியில் பல்பொருள் அங்காடி ஊழியர் விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் மகன் இப்ராஹீம் (வயது 45). இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இவர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான பொருட்களை வாங்குவதற்காக இப்ராஹீம், தான் வேலை பார்க்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்றார். அந்த சமயத்தில் அந்த கடைக்குள் பதுங்கி நின்ற ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்ததோடு அவரை திட்டி தாக்கினர்.

இதைப்பார்த்த இப்ராஹீம் மற்றும் அரசமங்கலத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் தீபக் (23) ஆகிய இருவரும் அவர்களை தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் இருவரும், இப்ராஹீம், தீபக் ஆகிய இருவரையும் தாக்கியதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

இதில் இப்ராஹீமின் வயிற்றிலும், தீபக்கின் முகத்திலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறிது நேரத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட இப்ராஹீம் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை அங்கிருந்த கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் இதுபற்றி விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி, உதவி ஆய்வாளர் மருது மற்றும் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்ராஹீம், தீபக் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே இப்ராஹீம் பரிதாபமாக இறந்தார். தீபக் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே பிடிபட்ட 2 வாலிபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ஞானசேகரன் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (24) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, அவர்களிடம்  நடத்திய விசாரணையில் கொலை செய்த வாலிபர்களின் தந்தை ஞானசேகரனுக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த ராஜசேகர், வல்லரசு இருவரும் அந்த பெண்ணையும், தனது தந்தையையும் கண்டித்துள்ளனர்.

இந்த சூழலில் நேற்று புதன்கிழமை மாலை அந்த பெண்ணை, பெரியகாலனி பகுதியில் ராஜசேகரும், வல்லரசுவும் பார்த்தனர். உடனே அவர்கள் இருவரும், அப்பெண்ணிடம் தகராறு செய்தனர். மேலும் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதோடு அவரை தாக்கினர். உடனே அந்த பெண், அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்.

இருப்பினும் அந்த பெண்ணை இருவரும் பின்தொடர்ந்து துரத்திச்சென்றனர். அந்த பெண், விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள பல்பொருள் அங்காடிக்குள் சென்று பதுங்கிக்கொண்டார். இதைப்பார்த்த அவர்கள் இருவரும் அந்த கடைக்குள் புகுந்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில் அங்கிருந்த இப்ராஹீம், தீபக் ஆகியோர் தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது என தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட சிபிஎம் மாவட்ட குழு சார்பில் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர் டீ.ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜி.ராஜேந்திரன், எஸ்.முத்துகுமரன் ஆகியோர் உயிரிழந்த இப்ராகிம் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அஞ்சலி செலுத்தினர்.  இந்த கொலைச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக விழுப்புரம் மாவட்ட சிபிஎம் மாவட்ட குழு தெரிவித்துள்ளது

Tags:    

Similar News