செஸ் வரியை ரத்து செய்ய வணிகர் பேரமைப்பு வலியுறுத்தல்
விழுப்புரத்தில் நடந்த வணிகர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டத்தில் செஸ் வரியை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்;
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 2021ஆம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் 28-12-2021 செவ்வாய்க் கிழமை அன்று விழுப்புரத்தில், சென்னை மெயின்ரோடு, ஆனந்தா திருமண மண்டபத்தில் பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்புரையாற்றினார்.மாநிலப் பொருளாளர் ஹாஜி.ஏ.எம்.சதக்கத்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார்.
விழுப்புரம் மாவட்ட அரிசி ஆலை சங்கத்தலைவர் ஆர்.கே.குபேரன், பேரமைப்பு வேலூர் மண்டலத்தலைவர் சி.கிருஷ்ணன், காஞ்சிபுரம் மண்டலத் தலைவர் எம்.அமல்ராஜ், திண்டுக்கல் மண்டலத் தலைவர் டி.கிருபாகரன், மாநில இணைச் செயலாளர் எம்.கலைமணி, மாநில கூடுதல் செயலாளர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றிவைத்து விழாவினை துவக்கி வைத்தனர்.
கூட்டத்தில், செஸ் வரியை முழுமையாக மாநில அரசு நீக்கி உத்தரவிட வேண்டும், ஒற்றைச்சாளர முறையில், ஒரே நேரத்தில் அனைத்து வணிக உரிமங்களும் எளிதாக பெற்றிட அரசு நடவடிக்கை எடுத்திடவும், நூல், ஜவுளி மற்றும் பின்னலாடைகளுக்கு 12 சதவிகித ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பழைய பிளாஸ்டிக்குகள், மற்றும் ஸ்கிராப்புகள் மீதான ஜி.எஸ்.டி வரி 18 சதவித வரி விதிப்பை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும்,
வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் மீதான விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும், வணிகக் கட்டிடங்கள் ஒரே கட்டிடத்தில் பல இணைப்புகள் இருப்பதை அரசு முறைப்படுத்தி, இருக்கும் நிலையே தொடர்ந்திட அனுமதி அளிக்க வேண்டும்,
கட்டண வசூல் நிறைவு பெற்ற சுங்கச் சாவடிகள், காலாவதியான சுங்கச் சாவடிகள் அகற்றிட மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்,
முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை நடைமுறைப்படுத்திட தமிழக அனைத்து வணிகர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேசிய முப்படைத் தளபதி தலைவர் பிபின்ராவத் மற்றும் அவரோடு பயணித்து உயிரிழந்த அவரின் மனைவி மற்றும் இராணுவ வீரர்களுக்கும், கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கே.டி.கேசவன், வடசென்னை கிழக்கு மாநிலத் துணைத்தலைவர் பி.தங்கபெருமாள், மத்தியசென்னை மாநிலத் கே.எஸ்.தங்கவேல், மாநில இணைச் செயலாளர் எம்.கிருஷ்ணன், மாவட்டத் துணைத்துலைவர் டி.ராமசாமி, வேலூர் குணாளன், துணைத்தலைவர் ஆகியோருக்கு இக்கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அஞ்சலி செலுத்தினர்.